மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90-ம் அதிகரித்தது.
நேற்று சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால், நேற்று டோக்கியோவில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 800 டாலருக்கும் குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 100 டாலரை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் டோக்கியோ, நியூயார்க் சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கம் 850 டாலராக உயர்ந்து விடும் என்று வர்த்தகர்கள் கணித்தனர். ஆனால் நேற்று சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 93 டாலராக குறைந்தது இதனால் தங்கத்தின் விலையும் குறைய துவங்கியது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா போன்ற ஆசிய நாடுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். இதனால் தங்கத்தின் விலை அதிகளவு குறைய வாய்ப்பில்லை என்று அந்நிய நாட்டு வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இன்று நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 804.70/805.50 டாலராக விற்பனையானது. நேற்று காலையில் இதன் விலை 791.30 டாலராக குறைந்தது. (நேற்றைய இறுதி விலை 803.70/804.40).
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.40/14.45 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,435 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,385 பார் வெள்ளி 1 கிலோ ரூ. 19,425