மும்பைச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கின் விலை அதிகளவு குறைந்தது. இது சென்செக்ஸ் குறைய முக்கிய காரணம்.
அத்துடன் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 23 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கி ஐந்து நிமிடத்திலேயே சென்செக்ஸ் 145.66 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,101.88 புள்ளிகளாக சரிந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 53 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 5,678.85 புள்ளிகளாக சரிந்தது.
காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 165.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,081.99 ஆக இருந்தது. இதே போல் மிட் கேப் 37.48 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 8,347.07 புள்ளி, சுமால் கேப் 7.18 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 10,336.07 புள்ளி, பி.எஸ்.இ.500- 58.11 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 7703.78 புள்ளிகளாக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 141.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,689.30 புள்ளிகளாக குறைந்தது. எல்லா பிரிவுகளின் குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், டி.எல்.எப், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஏ.சி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
அம்புஜா சிமென்ட், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டி.சி.எஸ், ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
இன்று முந்த்ரா போர்ட் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இரு பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டன. இதன் பங்குகள் ரூ.440 க்கு ஒதுக்கப்பட்டது. இவை பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இதன் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ.1,100க்கும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.770 ஆக இருந்தது.
அமெக்க பங்குச் சந்தையும் சரிவை சந்தித்தது. அமெரிக்காவில் வங்கிகள் கொடுத்த கடன் மீண்டும் வசூலாகததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மீண்டும் கடன் வழங்குவதில் உள்ள சிக்கல், வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு அமெரிக்கர்கள் செலவழிக்க மாட்டார்கள், இதனால் சரக்குகள் விற்பனை இருக்காது என்ற கணிப்பால் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது.