டாலர் மதிப்பு லேசாக குறைவு!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:11 IST)
அந்நியச் செலாவணி சந்தையில், வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகத்தில், இன்று டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு லேசாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த நிலையில் மாற்றம் தெரிந்தது. இன்று காலை 1 டாலர் மதிப்பு ரூ.39.66/ 68 என்ற நிலையில் இருந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ. 39.70/ 71)

ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் தலையிடும் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்கள் மத்தியில் நிலவியது. இதனால் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ 39.66/68 ஆக இருந்தது.

புதன் கிழமையன்று டாலரின் மதிப்பு குறைந்து, 1 டாலர் ரூ.39.62 க்கு விற்பனையானது. இது கடந்த ஒன்பது வருடத்தில் அதிகபட்சமாக டாலருக்கு எதிரான, ரூபாயின் மதிப்பு உயர்வாகும்.

இதற்கு காரணம் அதிகளவு அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனால் அதிகளவு டாலர் குவிந்தது.

டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதால், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மத்திய அரசிடம் சலுகைகளை எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், இந்தியா சந்தை பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. சந்தை நிலவரத்துக்கு தக்கவாறு டாலரின் மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு கலந்துரையாடலில் பேசுகையில், டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதை தடுக்க அமைச்சர் என்ற முறையில், நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதே நேரத்தில், இயற்கையாக இல்லாமல், டாலரின் மதிப்பில் மாற்றம் இருந்தால். ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று கோடிட்டு காட்டியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை ரிசர்வ் வங்கி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் வெளிநாடுகளில் செய்யும் முதலீட்டு வரம்பை அதிகரித்தது. இதன் மூலம் உள்நாட்டில் அதிகமாக குவியும் டாலரின் இருப்பு குறையும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ரிசர்வ் வங்கி நேரடியாக, அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, டாலரை வாங்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இது போன்ற காரணங்களினால், இன்று அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்