மும்பை அந்நியச் செலவாணிச் சந்தையில், இன்றும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு குறைந்தது.
பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதனால் டாலர் வந்து குவிகின்றது. இதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால், காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மும்பை பங்குச் சந்தை குறீயீட்டு எண் 256 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 39.86/ 86 ஆக குறைந்தது. ( வெள்ளிக் கிழமை மாலை ஒரு டாலரின் மதிப்பு ரூ. 39.90/ 91 ஆக இருந்தது ).
ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு குறைவதை கட்டுப்படுத்தும் வகையில், சந்தையில் டாலர்களை வாங்கும் என வெள்ளிக் கிழமை கருதப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி டாலரை வாங்கவில்லை.
அத்துடன் பெட்ரோலிய எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணையின் விலை உயர்வதால், டாலரை வாங்க துவங்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஆனால் சென்ற வாரம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணை 84 டாலராக விற்பனையானது. ஆனால் இப்பொழுது 82 டாலர் என்ற அளவிலேயே இருப்பதால், எண்ணை நிறுவனங்கள் டாலர் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
சென்ற வியாழக்கிழமை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பிறகு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.