சிறிய வெங்காயம் உற்பத்தி அதிகரிப்பு விலை வீழ்ச்சி

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (12:43 IST)
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டு சிறிய வெங்காயம் உற்பத்தி சிறப்பாக உள்ளது. அதே சமயம் விலை குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிககப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம், தாராபுரம், கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வளையப்பட்டி, மோகனூர், புதுக்கோட்டை, பொட்டிரெட்டிபட்டி ஆகிய பகுதியில் இருபத்தி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சிறு வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதம் சீஸன் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் விலை பல மடங்கு வீழ்ச்சி அடைத்துள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மூன்று மாதத்துக்கு முன்னதாகவே சில விவசாயிகள் சிறு வெங்காயம் பயிரிட்டிருந்தனர். அவர்களின் விளைநிலத்துக்கே சென்று மொத்த வியாபாரிகள் மூட்டை ரூ.1000 முதல் ரூ.1500 வரை வாங்கி சென்றனர்.

தற்போது சீஸன் என்பதாலும், உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், ஒரு மூட்டை சிறு வெங்காயம் விலை ரூ.600க்கு மட்டுமே மொத்த வியாபாரிகள் வாங்க முன் வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட விவசாயிகளிடம் கேட்டபோது சிறிவெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யவேண்டும் அப்போதுதான் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கும் என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்