அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு குறைந்து வருவதாக தொலை தொடர்பு துறை அமைச்சர் ஏ. ராஜா தெரிவித்தார்.
அஞ்சல் அலுவலகங்களில் சிறு சேமிப்பு, குறிப்பிட்ட கால வைப்பு நிதி உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
கடந்த நிதி ஆண்டில் (2007-08) அஞ்சலக சேமிப்பு திட்டங்களில், புதிதாக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதைவிட, அதிகமாக சேமிப்புகளை திரும்ப பெற்றுள்ளதாக நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கும் போது அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இதில் இருந்து மக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை விட, மற்ற வகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர் என்று தெரிய வருகிறது.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களுக்கு இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இதனால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இருந்த முதலீடுகள், மற்ற வகை சேமிப்பு திட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளை ஊக்குவிக்க 5 வருட அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கும், மூத்த குடிமக்களின் சேமிப்பு வருவாய்க்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 சி படி வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. அஞ்சலக மாதாந்திர சேமிப்பு திட்டங்களுக்கு 5 விழுக்காடு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
அத்துடன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அஞ்சல சேமிப்புக்கு இருந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு அதிகபட்ச வைப்பு நிதி ரூ.3 லட்சமாக இருந்ததை 4 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மாதாந்திர வருவாய் திட்டத்தில் அதிக பட்ச சேமிப்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜா தெரிவித்தார்.