பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்?

செவ்வாய், 18 மார்ச் 2008 (16:47 IST)
பங்குச் சந்தைகளில் தினசரி பங்குகளின் விலை குறைந்து சரிவு ஏற்படுவது எல்லா தரப்பு முதலீட்டாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு காரணம் பெரும் செலவந்தார்களாக உள்ள தனிப்பட்ட முதலீட்டளர்கள், முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீடுகளை திரும்ப‌ப் பெறுவதுதான். இவை பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் போது, பங்குகளின் விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் சரிகின்றன.

ஆசிய நாடுகளைப் போன்று வளரும் நாடுகளின் பங்குச் சந்தை முதலீடுகளை பற்றி எமர்ஜிங் போர்டஃபோலியோ ஃபண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் ஆய்வு செய்கிறது. இதன் ஆய்வறிக்கையில் கடந்த வாரம் ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து 70 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் திரும்ப‌ப் பெற்றுள்ளனர். பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இருந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் மட்டும் 200 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடுகளை திரும்ப‌ப் பெற்றுள்ளன.

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு, அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தையில் பின்னடைவு ஏற்படும். இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும். அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைந்துள்ள நாடுகளின் பங்குச் சந்தைகளின் மீது முதலீட்டு நிறுவனங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள், ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து பங்குகளையும், கடன் பத்திரங்களையும் விற்பனை செய்துவிட்டு, முதலீட்டை திரும்ப‌ப் பெற்றன.

இதில் ஜப்பானைத் தவிர மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இருந்து 71 கோடியே 40 லட்சம் டாலரை திரும்ப‌ப் பெற்றன. இதேபோல் லத்தின் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் இருந்தும் கணிசமான முதலீட்டை திரும்ப‌‌ப் பெற்றன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும், பிரிஸ்க் கன்ட்ரி ஃபண்ட் என்று அழைக்கப்படும் முதலீடு நிதியில் இருந்து, கடந்த நான்கு வாரங்களில் அதிக அளவு முதலீடு முன்றாவது முறையாக இரண்டாவது வாரத்தில் திரும்ப பெற்றன என்று ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன,

அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம் போன்ற உலோக சந்தையிலும், பெட்ரோலிய கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள் போன்ற பண்டக சந்தையில் முதலீடு செய்கின்றனர். பண்டக சந்தைகளில் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு தானியம், சமையல் எண்ணெய் பற்றாக்குறையினால், பண்டக சந்தையில் முதலீடு செய்வது, பங்குச் சந்தையைவிட லாபகரமானதாக இருக்கிறது.

எனவே இதன் விலைகள் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதன் எதிரொலியாக எல்லா நாடுகளிலும் பணவீக்கம் அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பதால், வங்கிகளில் செய்யும் வைப்பு நிதி போன்ற முதலீடுகளுக்கு கிடைக்கும் வட்டியுடன், பணவீக்கத்தை கழித்தால் முதலீடுகளுக்கான வருவாய் குறைகின்றது.

எனவே முதலீட்டு நிறுவனங்கள், தனிப்பட்ட செல்வந்தர்கள் பண்டக சந்தையில் முதலீடு செய்கின்றனர்.

இவர்கள் பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை திரும்ப‌ப் பெறுவதால் பங்கு‌ச் சந்தை சரிவை சந்தித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்