வே‌ம்‌பி‌ன் எ‌தி‌ர்கால‌ம்

வியாழன், 7 அக்டோபர் 2010 (16:21 IST)
இன்று மிகப் பிரபலமான தாவரப் பூச்சிக் கொல்லியாக வேம்பு திகழ்கிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உழவர்கள் வேப்ப இலைகளை தானியங்களுடன் கலந்தும், சாக்குப் பைகளை வேம்புக் கரைசலில் முக்கி எடுத்துக் காயவைத்தும் தானியங்களைச் சேதம் செய்யும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து வந்தனர்.

வேப்பம் பிண்ணாக்கு பயிர்களை கரையான், மற்ற பூச்சிகளின் தாக்குதலில் இருநூது பாதுகாப்பு அளித்தது. இதனை நிலத்தில் இட்டு பயன்படுத்துவதைவிட பயிர்களுக்குத் தெளித்துப் பயன்படுத்துவது மேலும் பல நன்மைகளைக் கொடுப்பதாக இருந்தது.

வேப்ப இலைகள் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இடுவதன் மூலம் அதிலுள்ள வேதிப் பொருட்கள் நேராக பயிர்களுக்கு வேர்களின் மூலம் ஊடுருவிப் பரவி நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.

வேம்பு சுற்றுச்சூழலை பாழ்படுத்துவதில்லை. இதனைப் பயிர்களுக்குத் தெளிப்பதால் பயிர்களுடன் தொடர்பு கொள்ளும் பறவைகள், தேனீக்கள், மண்புழுக்கள், எறும்புகள், சிலந்திகள் போன்ற உயிரினங்களுக்கு எவ்விதத் தீங்கையும் விளைவிப்பதில்லை. இது நீரின் மூலமாகப் பரவி மீன்களைப் பாதிப்பதில்லை.

வேம்பில் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பது மிக எளிது, செலவு பிடிக்காதது. விவசாயிகள் தயாரிக்கும் வேப்ப எண்ணெய்க் கரைசல், பூச்சிக்கொல்லிக் கம்பனிகளால் குறிப்பிட்ட வேதிப் பொருட்களைப் பிரித்து தயாரிக்கும் பூச்சிக் கொல்லியைவிடச் சிறந்தது.

1962ஆம் ஆண்டு டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பிரதான் என்பவர், வேம்பில் பூச்சிகளை உண்ணவிடாமல தடுக்கும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அதன் பின்னர் மேலை நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் வேம்பு தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்தனர். இதன்மூலம் மேலும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

பத்து வகையான வண்டினங்கள், பத்து வகையான ஈக்கள், இருபத்தைந்து வகையான பட்டாம்பூச்சிகள், புழு இனங்கள், ஒன்பது வகையான வெட்டுக்கிளி இனங்கள், பல்வேறு வகையான அசுவிணி இனங்கள், பூஞ்சைகள், இலையைத் தாக்கும் புழுக்கள், செம்பேன்கள், நூற்புழுக்கள், கரையான்கள் போன்ற மொத்தம் 200 உயிரினங்கள் கட்டுப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. செடியின் பல பாகங்களை தாக்கிச் சேதப்படுத்தும் பூச்சிகள், வேம்பில் வீரியத் தன்மை காரணமாக கொல்லப்படுகின்றன. உண்ணவிடாமல் தடுக்கப்படுகின்றன. பூச்சிகள் ஊனமுற்றவையாகவும் ஆக்கப்படுகின்றன. அத்துடன் முட்டைகளும் அழிக்கப்படுகின்றன.

செயற்கை முறையில் வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள வீரியத் தன்மை உள்ள வேதிப் பொருட்கள் பூச்சிகளின் இனப்பெருக்கத் தன்மை அல்லது சுவாச மண்டலம் அல்லது நரம்பு மண்டலம் இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன. இதனால் பூச்சிகள் அந்த ஒரு அபாயத்தை எதிர்கொள்ளும் தகவமைப்பை நாளடைவில் பெற்றுவிடுகிறது.

வேம்பு மற்றும் மற்ற தாவங்களில் தயாரிக்கப்படும் கரைசல்களில் பல வேறு வகையான வீரியத் தன்மையுள்ள வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இவை ஒரே சமயத்தில் பூச்சிகளின் அனைத்து உடலியல் இயக்க மண்டலங்களையும் தாக்கிச் சேதம் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஒட்டுமொத்தத் தாக்கி அழிக்கும் தன்மையை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் தன்மையை பூச்சிகள் உருவாக்கிகாள்ள வேண்டுமானால் ஒரே சமயத்தில் அனைத்துத் தாக்குதல்களையும் எதிர்த்து நிற்கும் திறனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது சாத்தியமே இல்லை. இதன் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது விவசாயிகள் வெற்றிகரமாக வேம்பை பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வேம்பைப் பொருத்தவரை ஒரு சில குறைபாடுகள் உள்ளன. இதில் உள்ள வீரியத் தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் வெயிலில் சிதைந்துவிடுவதால் அடிக்கடித் தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

வேம்பு எண்ணெயுடன் விளக்கெண்ணெய் போன்ற விரைவில் ஆவியாகாத எண்ணெய் கலந்து தெளித்தால் வெயிலில் வேம்பின் வீரியத் தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் சிதைவது சற்றுத் தாமதப்படுகிறது. பயிர்களுக்கு மாலை நேரம் தெளித்து வீரியத் தன்மை நீண்ட நேரம் செயல்பட வாய்ப்பு உருவாகும்.

வேப்ப எண்ணெயை அடர்த்தி கூடுதலாகத் தெளிப்பது கூடாது. இதனால் இலை கருகிவிடும் அல்லது இலைகள் வளர்ச்சி சீர்குலைவிற்குள்ளாகும்.

சாதாரண வேம்பிற்கு காப்புரிமை வாங்க முடியாது. இதனால் கம்பெனிகள் வேம்பில் இருந்து குறிப்பிட்ட வேதிப் பொருளை மட்டும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திப் பிரித்து இயற்கைப் பூச்சிக்கொல்லிகள் என்ற பெயரில் தயாரித்து மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகின்றன. இதைத் தெளித்தால் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை என்று தெரிவிக்கின்றன. இதற்குக் காப்புரிமையும் பெற்றுக் கொள்கின்றனர். தனித்தனியாக வேதிப் பொருட்களைப் பிரிக்கச் செலவு மிக அதிகமாக இருப்பதால் வேம்பில் உள்ள ஏதாவது ஒரு பொருளை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். இதனால் சாதாரண வேம்பில் இருந்து தயாரிக்கும் கரைசலின் சிறப்புக் குணங்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் மேற்படி கம்பனிகளின் தயாரிப்புகளில் குறைவதாகத்தான் இருக்கும்.

வியாபார ரீதியில் வேம்பின் பூச்சிக்கொல்லிகளுக்கு காப்புரிமை பெற்றுத் தயாரிக்கும் கம்பனிகள் அந்த தயாரிப்பில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்கள், அளவு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்துடன் வேதிப் பொருட்களின் வீரியம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வண்ணம் தயாரிப்புகளின் நிலைப்படுத்தும் வேதிப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். ஆனால் அவற்றை அளவிற்கு அதிகமாகவும் சேர்க்க முடியாது. அவ்வாறு சேர்த்தால் உயிரியல் சிதையும் தன்மையும் குறைந்துவிடும்.

பல இந்தியக் கம்பனிகள் பன்னாட்டுக் கம்பனிகளுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிற்சாலைகளை அமைத்து வேம்பில் இருந்து இயற்கைப் பூச்சிவிரட்டிகளைத் தயாரிக்கின்றன. இதனால் வேம்பு விதைகள் அல்லது அதன் வீரியக் கரைசல்கள் மிக அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகக்கூடிய சூழல் உருவாக உள்ளது. இதனால் வேம்பு விதைகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது. நம்நாட்டு வேளாண்மைக்குக் கூட பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகலாம்.

சில நிறுவனங்கள் வேப்ப மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி பூச்சிவிரட்டிகள் தயாரிக்கின்றனர். இதன் மூலம் வேப்ப மரம் முழுவதுமே ஏற்றுமதியாகும் சூழல் உருவாகலாம். ஏனெனில் வேம்பு இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.

வணிக நோக்கில் மரங்கள் ஓரினச் சாகுபடியாக வளர்க்கப்டும் போது வேம்பின் இயல்பான வீரியத் தன்மை குறைந்துவிடும்.

மற்றொரு முக்கியமான சிக்கல் என்னவென்றால் கம்பனிகள் வேம்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட வீரியமிக்க வேதிப்பொருளை அதாவது அசாடிரக்டின் என்ற பொருளை மட்டுமே பிரித்து எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எளிதாக எதிர்ப்புத் திறன்களை பூச்சிகள் உருவாக்கிவிடுவதால், அடுத்த வீரிய மிக்க வேதிப் பொருளை அதாவது சலானின் என்ற பொருளைத் தேர்வு செய்து பயன்படுத்தும் நிலை ஏற்படும். அதற்கும் பூச்சிகள் ஒரு கட்டத்தில் எதிர்ப்புத் திறன் பெற்றுவிடும். இப்படியாகத் தனித்தனியாகத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு கட்டத்தில் எல்லா வகையான எதிர்ப்புத் திறன்களையும் பூச்சிகள் பெற்றுவிடும். இதனால் சாதாரண வேம்பைக்கூட பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிவிடும்.

எனவே தொடக்கத்திலேயே இதிலுள்ள உண்மைகளைத் தெரிந்து கொண்டு உழவர்கள் சாதாரண வேம்பையே அதாவது வேதிப் பொருட்களைப் பிரித்தெடுக்காத வேம்பினைப் பயன்படுத்துவதே சிறந்தது.

ந‌ன்‌றி : தாளா‌ண்மை

வெப்துனியாவைப் படிக்கவும்