கேரளா, கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைகிறது

திங்கள், 29 ஜூன் 2009 (20:59 IST)
தென்மேற்குப் பருவமழை குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய வட, வடமேற்கு மாநிலங்களில் பரவலாக பொழியத் துவங்கியுள்ள நிலையில், கேரள, கர்நாடக மாநிலங்களிலும் தீவிரமடையத் துவங்கியுள்ளது.

தென் மாநிலங்களின் வானிலை குறித்து இன்று மாலை அறிக்கையளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 36 மணி நேரத்தில் கேரளா, லட்சத் தீவுகள், கடலோர, மத்திய, தென் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பொழியும் என்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுவையிலும், ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியிலும் ஆங்காங்கு மழை பொழியும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் மேட்டூரில் இருந்து நீர் திறப்பு இல்லாத காரணத்தினால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திலும், வட கேரளத்திலும் பெய்யும் மழையினால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்களில் பொழியும் மழையைப் பொறுத்து தாமதமாகவாவது குறுவை சாகுபடி துவங்கும் வாய்ப்பு உருவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தின் தேவலா, கண்ணணூர் ஆகிய இடங்களில் 6 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருச்செங்கோடு, காயன்குளம், ஹிரிபாட் 5 செ.மீ., மினிகாய், பீர்மேடு 4 செ.மீ. கர்நாடகத்தின் கோட்டா, மாவேலிக்கரை, குமாரபாளையம் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்