நெல் கொள்முதல்- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (13:17 IST)
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் நாளை (14 ஆம் தேதி) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கீழ்பவானி பாசனப் பகுதியில் தற்போது நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு காஞ்சிக்கோயில், நசியனூர், அவல்பூந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, வெள்ளோடு, கே.ஜி.வலசு, முத்தூர், தாராபுரம், புதுப்பை பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதியிலிருந்து இதுவரை விவசாயிகள் நெல் அறுவடை செய்தும், அதை விற்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

வெளிமார்க்கெட்டில் மிகக்குறைந்த விலைக்கே நெல் வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

எனவே, உடனடியாக மேற்கண்ட இடங்களில் நெல் கொள்முதல் மையங்களைச் செயல்படச் செய்து, நெல்லைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி வரும் 14 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்