திருச்சி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப் பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை மேம்படுத்த திறந்தவெளிக் கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் உள்துளை, சுற்றுத்துளை அமைத்தல், செயலற்ற திறந்தவெளி, ஆழ்குழாய் கிணறுக்குப் பதில் மாற்று திறந்தவெளி, ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ஆயில் எஞ்சின் வாங்குதல், புதிய மின் மோட்டார் வாங்குதல், பழுதுபட்ட மோட்டார்களுக்கு புதிய மின் மோட்டார்களை மாற்றி அமைத்தல், சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்தல், நீர்ப் பாசன வசதியை மேம்படுத்த பகிர்வு பாசனக் குழாய் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கடனுதவி பெற இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தேவைக்கு ஏற்ப மேல்காணும் நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்த, விண்ணப்பங்களை வருமானச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் நில உடைமை ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.