வீராணம் ஏரியிலிருந்து 12,500 கனஅடி நீர் திறப்பு

வியாழன், 27 நவம்பர் 2008 (13:41 IST)
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகளிலஏற்பட்டுள்ள வெள்ளத்தால், விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

வீராணம் ஏரியின் பாதுகாப்புக் கருதி 45 அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது. (அதிகபட்ச உயரம் 47.5 அடி) ஏரிக்கு கூடுதலாக வரும் 12,500 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இத்துடன் பொன்னேரியிலிருந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இது கருவாட்டுஓடை வழியாக வெள்ளாற்றில் செல்கிறது.

இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், நடுத்திட்டு, எடையார், செங்கழுநீர்பள்ளம், வெங்கடேசபுரம், மடப்புரம், பிள்ளையார்தங்கல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது.

குமராட்சி அருகே கோப்பாடி மதகிலிருந்து பழைய கொள்ளிடத்தில் 22 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறுவதால், இதன் அருகில் உள்ள நந்திமங்கலம், வேளக்குடி, பெராம்பட்டு, அகரநல்லூர், பழையநல்லூர், ஜெயங்கொண்டப்பட்டினம், சின்னகாரமேடு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் புகுந்தது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வெள்ளப்பெருக்கெடுத்து 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்