பம்பா-அச்சன்கோவில்-வைப்பார் இணைப்பு: கேரள அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
புதன், 26 நவம்பர் 2008 (18:07 IST)
தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் கேரளத்தில் உற்பத்தியாகி ஓடும் பம்பா, அச்சன்கோவில் நதிகளை, தமிழ்நாட்டின் வைப்பார் நதியுடன் இணைக்க வேண்டும் என்று தமிழகத்தின் மனுவிற்கு பதிலளிக்குமாறு கேரள அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பம்பா, அச்சன்கோவில் நதிகளை தமிழ்நாட்டின் வைப்பார் நதியுடன் இணைப்பது சாத்தியமே என்று தேச நீர் மேம்பாட்டு ஆணையம் (National Water Development Authority - NWDA) தெரிவித்தது. பிஏவி இணைப்புத் திட்டம் என்றழைக்கப்படும் இத்திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசின் சம்மதத்தைப் பெற்றுத்தருமாறு மத்திய அரசிற்கு கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கடிதம் ஒன்று எழுதினார்.
மறுநாள், இந்தியாவின் மையப் பகுதியில் ஓடும் மகாநதி, கோதாவரி நதிகளை இணைத்து, அவைகளின் உபரி நீரை கிருஷ்ணா, பெண்ணார், காவேரி நதிகளுக்கு கொண்டுவர மிகப் பெரிய இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். தான் எழுதிய கடிதங்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி 2007ஆம் ஆண்டு மீ்ண்டும் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார்.
ஆனால், தமிழ்நாட்டின் இந்த விருப்பத்தை ஏற்க கேரள அரசு மறுத்துவிட்டது மட்டுமின்றி, அதற்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து பம்பா, அச்சன்கோவில், வைப்பார் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசிற்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி தமிழ்நாட்டின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ்நாடு, இநநதிகள் அனைத்தும் மழையால் நீர் பெறுபவை, எனவே அந்த நீரை முறையாக பயன்படுத்த நதிகள் இணைப்பு அவசியமானது என்று தனது மனுவில் கூறியுள்ளது.
இந்த வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே.எம். பாஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழகத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஜி. உமாபதி, இவ்வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை கூறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற அமர்வு, தமிழ்நாட்டின் மனுவிற்கு பதிலளிக்குமாறு கேரள அரசிற்கும், மத்திய அரசிற்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.