மும்பை: இந்த வருடம் உரத் தட்டுப்பாடு, சில பகுதிகளில் பருவமழை தவறியது, பருவமழை தாமதமாக தொடங்கியது போன்ற காரணங்கள் இருந்தாலும், சென்ற வருடத்தைப் போலவே, இந்த ஆண்டும் வேளாண் துறை வளர்ச்சி 4 முதல் 4.5 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பையில் பண்டக சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான பார்வர்ட் மார்க்கெட் கமிஷன் (Forward Market Commission) ஏற்பாடு செய்திருந்த பண்டக சந்தைகளின் ஏழாவது தேசிய மாநாட்டை நேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், சில பயிர்களுக்கு பருவமழை பாதகமாக இருந்தது. இருப்பினும் வேளாண் துறை உற்பத்தி 4.5 விழுக்காடாக இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
மொத்த வர்த்தகத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இதன் முன்பேர சந்தையில், இவற்றின் வர்த்தக அளவு குறைந்து வருகிறது. 2006-07 ஆம் ஆண்டுகளில் மொத்த வேளாண் பொருட்கள் வர்த்தகத்தில், முன்பேர சந்தையின் பங்கு மூன்றில் 1 பங்காக இருந்தது. இது செப்படம்பரில் எட்டுல் 1 பங்காக குறைந்து விட்டது.
இதற்கு காரணம் முன்பேர சந்தையில், சில தானியங்கள் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது தான் என்று கூறுவது முழுமையான காரணம் அல்ல என்று கூறினார்.