தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கே மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக மழை ராஜ் தெரிவித்துள்ளார்.
மழை பற்றி ஆய்வு நடத்தி வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், எமது தமிழ்.வெப்துனியா.காமிற்கு கணித்து அனுப்பியுள்ள அறிக்கையில், “வெப்துனியாவிற்கு அனுப்பிய கடந்த ஆய்வு அறிக்கையில், தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தீவிரமடையும் சூழல் உள்ளதாகவும், ஓரிரு தினங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தேன்.
ஆனால் கடல் பரப்பில் குறிப்பிட்ட இடங்களில் உற்பத்தியான மேகங்கள் படிப்படியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் குறிப்பிட்ட பகுதியில் நிலை கொண்டதாலும், ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியதாலும் தமிழகத்தில் மழை மேகங்கள் உருவாவது தடைப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் மேகங்கள் உற்பத்தி காணப்பட்டாலும் அவை மேலும் தமிழகத்தை நோக்கி நகரவில்லை. இதனால் தமிழகத்தில் கடல் சீற்றம் மட்டுமே தொடர்ந்து காணப்பட்டது. ஒரு வார தாமதத்திற்குப் பிறகு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கே மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
எனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் 18 முதல் 21ம் தேதி வரை கன மழையும், இதர மாவட்டங்களில் மிதமான பழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தேதியின் கணிப்பின்படி நவம்பர் மாதம் 17 முதல் 27ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் மாதம் 13ஆம் தேதி மூன்று நாட்கள் வித்யாசத்தில் ஓரளவு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்தது போல இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நவம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.