வங்கக் கடலில் உருவாகியுள்ள காய் முக் புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் அருகே பாபட்லா - காகிநாடா கரையோரப் பகுதிகளுக்கு இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, சென்னையிலிருந்து 520 கி.மீ. தூரத்திலும், மசூலிப்பட்டிணத்தில் இருந்து 600 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழி வலுவடைந்து புயலாக மாறி வடமேற்கு ஆந்திராவின் கரையோரப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது.
காய் முக் புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து 270 கி.மீ. தூரத்திலும், மசூலிப்பட்டிணத்தில் இருந்து 230 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா, காகிநாடா கரையோரப் பகுதிகளுக்கு இடையே இன்று கரையைக் கடக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காய் முக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் கரையைக் கடக்கும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழையோ அல்லது மிக பலத்த மழையோ பெய்யக்கூடும் என்றும், அந்த மழை அதிகபட்சமாக 25 செ.மீ. வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது 1 முதல் 2 மீட்டர் வரை கடல் சீற்றம் காணப்படும் என்றும், இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் கரையோர மாவட்டங்களான பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு-மேற்கு கோதாவரி மற்றும் யாணம் மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.