திருச்சி: மேட்டூர் அணயின் நீர் மட்டம் 80 அடிக்கும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 79,690 அடி.
இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளில் உள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது கடந்த மாதம் 31 ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. அனறு முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, படிப்படியாக 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
அப்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 11,190 கனஅடியாக இருந்தது.
தற்போது அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 6,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இருப்பினும் பாசன பகுதிகளின் தேவைக்காக தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப் படவில்லை. விநாடிக்கு 15,995 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2,316 கன அடி, வென்னாற்றில் விநாடிக்கு 6,901 கன அடி, கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,513 கனஅடி கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,211 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் கடைமடை பகுதியில் தண்ணீர் பாயவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வென்னாற்று பாசன பகுதி விவசாயிகள் இன்னும் ஒரு வாரத்தில் மழை பெய்யாவிட்டால், அல்லுது போதிய தண்ணீர் பாசனத்திற்கு இல்லாவிட்டால் நெல் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர்.
காவிரி பாசன பகுதிகளில் 1 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா பருவத்திற்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தாளடி பருவத்திற்கும் 19 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் விதைப்பு நேரத்தில் தரையில் நன்கு ஈருப்பதம் இருந்தது. அதற்கு பின் தண்ணீர் இருந்ததால், பயிர்கள் நன்கு வளர்ந்து செழித்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மழை பெய்யாவிட்டால், நெல் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
காவிரி பாசன பகுதிகளில் தாளடி, சம்பா பயிர்களை காப்பாற்ற வென்னாறு, கல்லணை கால்வாயில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
தண்ணீர் திறந்து விடுவதுடன், விவசாய பாசனத்திற்கு உதவும் மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்க தினசரி குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
காவிரி பாசன பகுதிகளில் கடை கோடி பகுதிகளான காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் போதிய மழை பெய்யாவிட்டால், பலத்த சேதம் ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.