சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்புவதில்லை: விவசாயிகள் முடிவு!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (09:42 IST)
ஈரோடு: ஈரோட்டில் உள்ள சக்தி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதில்லை என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
சக்தி சர்க்கரை ஆலை வளாகத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. விவசாயிகளிடம் பிடித்தம் செய்த கோடிக்கணக்கான ரூபாய்களை விவசாயிகளுக்கு இதுவரை திருப்பித் தரவில்லை.
அத்துடன் கரும்புக்கு கட்டுப்படியான விலை தரவில்லை. எனவே விவசாயிகள் கரும்பு வெட்டுவதில்லை என்றும், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதில்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி ராசிபுரத்தில் வரும் 14-ம் தேதி நடைபெறும் அனைத்து கரும்பு விவசாயிகள் மாநாட்டில் அதிக அளவில் விவசாயிகளைப் பங்கேற்கச் செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதில் சக்தி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கப் பொருளாளர் ரவீந்திரன், காளிங்கராயன் பாசன சங்கத் தலைவர் வேலாயுதம், வலது கரை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.மோகன் மற்றும் அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கம், பவானி நதிநீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.