பச்சை பட்டாணி விலை உயர்வு!

திங்கள், 10 நவம்பர் 2008 (09:36 IST)
மதுரை: மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் பச்சைப்பட்டாணி விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

சென்ற வாரம் பச்சை பட்டைணி விலை கிலோ ரூ.45 என்ற அளவில் இருந்தது. இதன் விலை நேற்று ரூ.90 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் காய்கறி தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த 15 தினங்களுக்கு முன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் எல்லா வகை காய்கறி விலை அதிகரித்தது.

இந்த விலை உயர்வு குறித்து, மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ்.முருகன் கூறுகையில், பச்சை மிளகாய் உள்பட எல்லா வகை காய்கறிகளின் விலையும் கூடியுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் தேனி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்துக் குறைந்துள்ளது. அத்துடன் மழையினால் காய்கறிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு, தற்போதைய சீசனில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன. இத்துடன் கீரைகளின் விலையும் கூடியுள்ளது.

இந்த வாரம் கத்திரிக்காய் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் கத்தரிக்காய் 1 கிலோ விலை ரூ.35 என்ற அளவில் இருந்தது. இது தற்போது ரூ.25 க்கு விற்கப்படுகிறது.

தற்போது அதிகரித்துள்ள காய்கறிகளின் விலை, அடுத்து வரும் மாதங்களில் குறைய வாய்ப்புண்டு.

பச்சை மொச்சை சீசன் ஆரம்பித்தால் அனைத்துக் காய்கறிகளும் விலை குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்