தண்ணீர் திறக்க நீர்ப்பாசன சங்கம் கோரிக்கை!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதியில் பிசான பருவ சாகுபடிக்கு மூன்று கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாய சங்கம் கோரியுள்ளது.

நேற்று நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 119.10 அடி, சேர்வலாறு அணையில் 136.71 அடி, மணிமுத்தாறு அணையில் 78.10 அடியாக இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீர்வரத்து உள்ளது.

குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர், தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அம்பாசமுத்திரம் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னிக் கால்வாய் மூலம் சுமார் 5,600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கு நாற்று பாவுதல், நடுகை போன்ற ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்க மூன்று கால்வாய்களிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று, மூன்று கால்வாய் நீர்ப்பாசன சங்கத் தலைவர் க. சுப்பிரமணியமழவராயர், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்