கூடுதல் நீர் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

வியாழன், 30 அக்டோபர் 2008 (10:15 IST)
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், கீழவளவு கடைமடைப் பகுதிகளுக்கு கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடக் கோரி, மேலூரில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் செய்தனர்.

பெரியாறு -வைகை பாசன ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பாசன பகுதிகளில் தணணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நடவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வடகிழக்கு பருவமழையால் வங்காள விரிகுடாவில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இதனால் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், தற்காலிகமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த மழை காரணமாக ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் அனைத்து குளங்களும் நிரம்பின. ஆனால் இந்த பகுதிகளில் தற்போது மழை இல்லை. அத்துடன் அதிக அளவு வெயில் அடிக்கிறது. இந்த வெப்பம் தாங்காமல் வயல்களில் நட்ட நாற்றுக்கள் கருகத் தொடங்கி உள்ளன. இந்த பகுதியில் கால்வாய்களில் குறைந்த அளவு தண்ணீர் விடப்படுவதால், இவை கடைமடைப் பகுதிகளைச் சென்றடையவில்லை.

இதனால், கடைமடைப் பகுதிகளான கீழவளவு, வெள்ளலூர் தனியாமங்கலம் வட்டாரத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என, மேலூர் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அத்துடன் மேலூர் -திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் விவசாயிகள் சாலை மறியலை விளக்கிக் கொண்டனர்.

இந்த சாலை மறியலில் ஈடுபட்ட அ.இ.அதி.மு.க ஒனறியச் செயலர் செல்வராஜ் உட்பட 80 விவசாயிகள் மீது மேலூர் போலீôர் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துடன் பொதுப்பணித் துறை களப்பணியாளர் திருஞானத்தை தாக்கியதாக சருகுவலையபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரகாசம், கீழவளவு அய்யனார் உள்ளிட்ட 6 பேர் மீது மற்றொரு வழக்கையும் காவல் துறையினர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்