சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மல்லிகைப் பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம் மல்லிகை பூ விலை குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கெஞ்சனூர், தாண்டாபாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ஆலத்துகோம்பை, பவானிசாகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருபத்தி ஐந்து ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகைப் பூ பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் மல்லிகை பூ தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வது மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் மற்றும் மும்பைக்கு செல்கிறது. மற்ற மல்லிகையை விட சத்தியமங்கலம் பகுதியில் விளையும் மல்லிகை பூவின் காம்பு சற்று நீளமாக இருப்பதால் இந்த மல்லிகைப் பூவிற்கு தனிச் சிறப்பு உள்ளது.
தற்போது சத்தியமங்கலம் பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் தற்போது மல்லிகைப் பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. சாதாரணமாக இந்த சமயத்தில் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு ஏழு டன் மல்லிகை பூ உற்பத்தியாகும்.
ஆனால் தற்போது தொடர்மழையின் காரணமாக பத்து டன் வரை உற்பத்தியாகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500 வரை விற்பனையானது. ஆனால் நேற்று சத்தியமங்கலம் விவசாயிகள் மல்லிகைப் பூ மார்கெட்டில் ஒருகிலோ மல்லிகை ரூ.300 வரை மட்டுமே ஏலம்போனது.
தற்போது மல்லிகைப் பூ தேவைக்கு மேல் உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மல்லிகை பூ விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தீபாவளி சமயத்தில் மல்லிகை விலை அதிகரிக்கும் என நினைத்துக் கொண்டிருந்த பூமாலை வியாபாரிகளுக்கு இந்த விலை இறக்கம் மகிழ்ச்சியை அளித்துள்ளது.