விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:16 IST)
ஹைதரபாத்: மத்திய அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறாத விவசாயிகள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி கட்டிய விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு விவசாயிகளின் திருப்பி செலுத்தாத கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு சில விதிமுறைகளையும் அறிவித்தது.

இந்த விதிமுறைகள் பொருந்தாத விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதே போல் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கும் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இந்த விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்குவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில விவசாய துறை அமைச்சர் என்.ரகுவிரா ரெட்டி வணிக வரி அமைச்சர் கொனாதலா ராமகிருஷ்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர் பி.சத்திய நாராயணா, ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நிதி அமைச்சர் கே.ரோஷய்யா தலைமையிலான அமைச்சரவை குழு, கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று மாநில அரசு கடனை திருப்பி செலுத்திய தேதியை 2007 மார்ச் 31 ஆம் தேதியில் இருந்து 2006 டிசம்பர் 31 ஆம் தேதியாக கணக்கில் எடுத்துக் கொள்ள சம்மதித்துள்ளது.

இதனால் 2006 டிசம்பர் மாதத்திற்கு பிறகு கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

இதனால் மத்திய அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தால் பயன் பெறாத சுமார் 35 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்திரா காந்தி பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் தேதி சேர்க்கப்படும். இந்த தகவல் அவர்களுக்கு அனுப்பப்படும். இதனால் மாநில அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகும் என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்