கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்புகின்றன!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (14:10 IST)
காவிரி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பொழிந்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

கபினி அணைக்கு நொடிக்கு 25,000 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளதால் அந்த அணையின் நீர்மட்டம் 2,281.20 அடிக்கு உயர்ந்துள்ளது. அணை முழுமையாக நிரம்புவதற்கு இன்னும் 3 அடியே உள்ளது. எனவே அணைக்கு வரும் நீர் முழுவதுமாக காவிரியில் திருந்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோலவே, காவிரியின் மீது கர்நாடகத்திலுள்ள மிகப் பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகருக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 121.32 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு நீர்மட்டம் 124.80 அடியாகும். இதனால் கி.ரா.சா. அணையிலிருந்தும் நீர் திறந்துவிடப்படும் நிலை உள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அடுத்த ஓரிரு நாட்களில் வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.64 அடியாக உயர்ந்துள்ளது. நொடிக்கு 27,763 கன அடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நொடிக்கு 709 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. காவிரி பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கல்லணைக்கு வரும் நீர், 1,520 கன அடி வீதம் காவிரியிலும், 1,108 கன அடி வீதம் வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயில் 207 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,513 கன அடி வீதமும் திறந்துவிடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்