ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை: நெற்பயிர்கள் கடும் பாதிப்பு!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (10:46 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, சென்னிமலை உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரை மையமாக கொண்டு நெற்பயிர் நடவு செய்துள்ளனர்.
இந்த நெற்பயிர் வயல்கள் தொடர்மழையால் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அழுகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வயலில் நிற்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். பலத்த மழையின் காரணமாக அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் திறந்துவிடும் தண்ணீர் வயல்வெளியை விட்டு வெளியேறுவதில்லை.