ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை பட்டதாரிகள் சிறிய மண் பரிசோதனைக் கூடத்துடன் கூடிய பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த பயிர் மருத்துவமனைகளை அமைக்க வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
அவர் இது குறித்து கூறுகையில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிர் சிகிச்சை மையங்கள் தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இதற்கென வணிக வங்கி கடனுதவியுடன் 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.
இப் பயிர் சிகிச்சை மையங்களில் மண் பரிசோதனை செய்வதுடன், பயிர் தேர்வு, இடுபொருள்கள், பண்ணை தொழில்நுட்பங்கள், விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல், விற்பனை, பயிர்க் காப்பீடு மற்றும் பயிர்க் கடன் பெறுதல் போன்றவை தொடர்பாக ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
பயிர் சிகிச்சை மையங்கள் அமைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிபெற்ற இந்த வேளாண் பட்டதாரிகள் விரைவில் பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க உள்ளனர்.
மாவட்டத்தில் இதர வட்டாரங்களான மண்டபம், திருப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, நயினார்கோவில், போகலூர், கடலாடி வட்டாரத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற வேளாண் பட்டதாரிகள், பணி ஓய்வுபெற்ற 3 ஆண்டுகள் கடந்த வேளாண் பட்டதாரிகளும் அந்தந்தப் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் பயிர் சிகிச்சை மையங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.