காபி பயிரில் நோய்த் தாக்குதல்- கட்டுப்படுத்த யோசனை!

ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் காபி உற்பத்தியை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பது குறித்து விவசாயிகளுக்கு காபி வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.

ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் காபி உற்பத்தியை பாதிக்கும் வகையில் காய் துளைப்பான், வெள்ளைத்தண்டு துளைப்பான், காபி இலைத்துரு ஆகிய நோய்கள் தற்போது பரவி வருகிறது.

காய் துளைப்பான் என்பது காய்களின் நுனிப்பகுதியில் துளையிட்டு நோயை ஏற்படுத்தும். இந்நோயால் பாதித்த காய், பழங்களைப் பறித்து இரு நிமிடம் கொதிநீரில் பதப்படுத்தலாம். உபயோகமற்ற காய், பழங்களை எரித்தும், மண்ணில் ஆழமாக புதைத்தும் விடவேண்டும்.

காபி செடிகளின் காம்புகளை அகற்றி சரியான நிழலில் பராமரித்து பவேரியா, பேசியானா என்ற பூஞ்சாணத்தை தெளித்து முழுவதுமாக அறுவடை செய்யவேண்டும்.

வெள்ளைத்தண்டு துளைப்பான் அராபிகா செடிகளைத் தாக்கும் நோயை கண்டறிந்து வேறுடன் பிடுங்கி தீயிட்டு எரிக்க வேண்டும்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காபி செடியில் காய், பழங்களில் பூச்சிகள் பரவும். இக்காலங்களில் 200 லிட்டர் தண்ணிரீல், டி.டி.எல். பெவிகல் 200 மில்லி, 20 கிலோ சுண்ணாம்பு என்ற விகிதத்தில் கலந்து, கையுறை அணிந்து தேங்காய் நாரில் காபி செடியின் பட்டைகள் மீது தேய்க்க வேண்டும்.

காபி இலைத்துரு நோயைத் தடுக்க கண்டாப் மருந்தை 400 மில்லி, ஒட்டும் திரவம் 100 மில்லி, 200 மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து, அரைசதம் போர்டோ கலவை மருந்தை இம் மாதத்தில் காபி செடி இலைகளின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும். மேலும் 350 கிராம் பொட்டாஷ், 250 ஜிங்க் சல்பேட் கலந்து தெளிக்க வேண்டும் என்று ஏற்காடு காபி வாரியத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெப்துனியாவைப் படிக்கவும்