இந்த வருடத்தில் முதன்முறையாக அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது!

ஈரோடு: தாராபுரம் அருகே உள்ள அமராவதி அணை இந்த வருடத்தின் முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

கோவை மாவட்டம், உடுமலையில் உள்ளது அமராவதி அணை. இது 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த அணையில் கடந்த மாதத்திற்கு முன் 50 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

கடந்த சில வாரங்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கடந்த ஒன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் கடந்த ஒன்றாம் தேதி பாசனத்திற்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் நேற்று அணையில் நீர்மட்டம் 89 அடியை தொட்டது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரவில் இருந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்