நெல்லுக்கு ரூ.1,250- விவசாயிகள் கோரிக்கை!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (16:44 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை குவின்டாலுக்கு ரூ.1,250 ஆக உயர்த்தும்படி விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

திருச்சியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குறுவை பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,250 வழங்க வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட காவிரி பாசன பகுதி விவசாயிகள் நல சங்க தலைவர் ஜி.கனகசபை கூறுகையில், சென்ற வருடம் மத்திய அரசு நெல்லுக்கு அறிவித்த விலையை விட கூடுதலாக மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு சாதாரண ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1000, சன்னரக நெல்லுக்கு ரூ.1,050 வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நெல் பயிர் சாகுபடி செய்வதற்கு தேவையான பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,250 வழங்க வேண்டும்.

குறுவை பருவத்தின் நெல் அறுவடை அடுத்த பதினைந்து நாட்களில் துவங்கிவிடும். இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவு திறக்க வேண்டும். நடமாடும் கொள்முதல் நிலையங்களையும் இயக்க வேண்டும்.

இப்போது மழை காலமாக உள்ளது. எனவே 24 விழுக்காடு ஈரப்பதம் இருக்கும் நெல்லையும் கொள்முதல் செய்யும் படி அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே மாவட்ட அதிகாரிகள் இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்று கனகசபை தெரிவித்தார்.

இந்த சங்கத்தின் துணை பொது செயலாளர் ஆர்.சுப்ரமணியன் கூறுகையில், பொதுப் பணித்துறை அதிகாரிகள் உய்யக்கொண்டான், கட்டளை மேல் பகுதி கால்வாயில் போதிய அளவு தண்ணீர் பாயும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

பாரதீய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கூறுகையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்ட விதிமுறைகளை, வங்கி அதிகாரிகள் சரியான முறையில் கடைபிடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1 ஏக்கருக்கு 50 கிலோ மட்டும் டை அமோனியம் பாஸ்பேட் உரமும், மற்ற உரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரம் போதாது. குறைந்த பட்சம் 100 கிலோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அதிகாரிகள், விவசாய துறையின் பரிந்துரைப்படியே உரம் விநியோகப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியாளர் டி.சவுன்டையா பதிலளிக்கையில், உரம் கூடுதலாக வழங்குவது பற்றி விவசாய துறை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றேன். உரம், விதை தட்டுப்பாடு இல்லை. தற்போது தாலுகாவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. அறுவடை தொடங்கியவுடன் தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கரும்பு விவசாயிகள் தெரிவித்த புகார்களை பரிசீலிக்க தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் விலை.

மத்திய அரசு நேற்று சாதாரண ரக நெல் கொள்முதல் விலையை (ஆதார விலை) குவின்டாலுக்கு ரூ.850 (சென்ற வருடம் ரூ.745), சன்னரக நெல்லுக்கு ரூ.875 (சென்ற வருடம் ரூ.775) என்று நிர்ணயித்துள்ளது.

இந்த முடிவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பரிந்துரை படி, நெல் கொள்முதல் விலை முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல் சாகுபடி செய்யப்படும் மாநில அரசுகள் குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன. மத்திய அரசு தற்போது அறிவிக்க உள்ள விலையை விட, கூடுதலாக ரூ,50 போனஸ் அறிவிக்கும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்