காஃபி செடி பயிரிட 100 கோடி!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:30 IST)
காஃபி உற்பத்தியை அதிகரிக்க, பழைய காஃபி செடிகளுக்கு பதிலாக, புதிய காஃபி செடி வளர்க்க சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட உள்ளது. இதன் படி 45 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் தற்போது உள்ள காஃபி, செடிக்கு பதிலாக புதிய செடி வளர்க்கப்படும்.

இது குறித்து காஃபி வாரியத்தின் தலைவர் ஜி.வி கிருஷ்ணா ராவ் கூறுகையில், தற்போது உள்ள காஃபி செடிக்கு பதிலாக புதிய செடி வளர்ப்பதால், 1 ஹெக்டேருக்கு கூடுதலாக ஆயிரம் கிலோ காஃபி கொட்டை உற்பத்தியாகும்.

இந்தியாவில் 2000-01ஆம் ஆண்டுகளில் காஃபி தோட்டங்களில், ஒரு ஹெக்டேருக்கு 959 கிலோ விளைச்சல் இருந்தது. இது 2007-08ஆம் ஆண்டுகளில் 765 கிலோவாக குறைந்து விட்டது.

காஃபி விளைச்சல் குறைந்ததற்கு காரணம், செடிகளில் பூச்சி தாக்குதலும், கடந்த இரண்டு வருடங்களாக காஃபி தோட்டம் அமைந்துள்ள பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததும்தான்.

காஃபி வாரியம் காஃபி செடிகள் பாரம்பரியமாக வளர்க்கப்படும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40 ஆயிரம் ஹெக்டேர் காஃபி தோட்டத்திலும், புதிதாக வளர்க்க துவங்கியுள்ள ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் 5,100 ஹெக்டேரில், பழைய காஃபி செடியை எடுத்து விட்டு, புதிய செடி வளர்க்க திட்டமிட்டுள்ளது.

இதனால் உற்பத்தி அதிகரிக்கும். இது உள்நாட்டில் அதிகரிக்கும் காஃபி தேவையை நிறைவு செய்வதாக இருக்கும்.

காஃபி செடியை நட்ட பின், நான்கு முதல் ஐந்து வருடங்களுக்கு பிறகு விளைச்சல் கொடுக்க துவங்கும். ஒரு செடியில் 40 முதல் 45 வருடங்கள் வரை விளைச்சல் இருக்கும். அதற்கு பிறகு பழைய செடிக்கு பதிலாக புதிய செடி நடவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்