தமிழ்நாட்டில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்கள் தீட்ட ரூ.25.27 கோடி!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:01 IST)
தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளம், நீர் நிலைகள் ஆகியவற்றை காப்பாற்றி மேம்படுத்தவும், வெள்ள நீர் ஆளுமைத் திட்டங்கள் தீட்டவும் உலக வங்கி உதவியுடன் ரூ.25.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம், நீர் நிலைகளைக் காப்பாற்றவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் வெள்ள நீர் வீணாக கடலில் சென்று கலக்காமல் அதனை தேக்கி பயன்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறியவும் நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து செயல் திட்டம் தீட்ட இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக உலக வங்கி ரூ.20.65 கோடியும், தமிழக அரசு 4.62 கோடியும் வழங்கியுள்ளன.

இந்த ஆய்வு மற்றும் திட்டம் தீட்டுதலை தமிழக பொதுப் பணித் துறையின் அங்கமான நீர் வள அமைப்பு ஒருங்கிணைத்து செயலபடுத்தும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்