கரும்புக்கு குறைந்தபட்ச விலையை அறிவிக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நாளை தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கர்பூர் சாந்தகுமார் நேற்று மைசூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2008-09 ஆண்டு சர்க்கரை பருவத்திற்கு கரும்புக்கு குறைந்தபட்ட ஆதார விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ராஜ்பவன் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்த போகின்றோம்.
மாநில அரசு 1 டன் கரும்புக்கு ரூ.160 கூடுதலாக சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரைவை சர்க்கரை ஆலைகள் உதாசீனப்படுத்துகின்றன. இவை கூடுதல் விலையை கொடுக்காததுடன், கரும்பு அரவை செய்யாமல் காலதாமதப்படுத்துகின்றன.
மாநில அரசு 10 குதிரை திறன் உள்ள மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச மின்சாரம் எத்தனை மணி நேரத்திற்கு வழங்கப்படும் என்பதை அறிவிக்கவேண்டும். விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் அளவை கருவியை (ரீடிங் மீட்டர்) பொறுத்த கூடாது.
நாளை ராஜ்பவன் முன்பு நடக்க இருக்கும் தர்ணா போராட்டத்தில் மாநிலத்தில் எல்லா பகுதிகளில் இருந்தும் பெருந்திரளாக கரும்பு விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.