பணவீக்கத்தால் விவசாய உற்பத்திச் செலவு அதிகரிப்பு!

வியாழன், 24 ஜூலை 2008 (14:36 IST)
ரூபாயின் பணவீக்கத்தால் வேளாண் இடுபொருட்கள் விலைகள் உயர்ந்து உற்பத்தி செலவு அதிகரித்த அளவிற்கு விளை பொருட்களுக்கு அதற்கேற்ற விலை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை என்று தேச நடைமுறை பொருளாதார ஆய்வுப் பேரவை தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வருவாய் உற்பத்தி - சந்தை நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியதாகும், ஆயினும், எதிர்பாராத இந்த பணவீக்கத்தால் அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் இடுபொருட்களின் விலையேற்றத்தால் ஆன கூடுதல் செலவிற்கு ஏற்ற அளவு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிட்டவில்லை என்பது தங்களின் ஆய்வு தெரிவிப்பதாக தேச நடைமுறை பொருளாதார ஆய்வுப் பேரவை (National council for Applied Agriculture Research - NCAAR) தனது இம்மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பணவீக்கத்தின் காரணமாக இடுபொருட்கள் விலைகள் உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் அன்றாடக் கூலியும் உயர்ந்துவிட்டது. இதனால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு மேலும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதார நியதிப்படி, ஒரு நாட்டின் பொருளாதார ரீதியாக வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது, பணவீக்கம் அதிகரித்தால் அதனால் ஏற்படும் விலையேற்றம் விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலையை பெற்றுத்தரும். அதன் மூலம் இடுபொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்ட கூடுதல் செலவீனத்தைவிட அதிகமாக விவசாயிகளுக்கு வருவாய் கிட்டும். இது நமது நாட்டில் நிகழவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்