பணப்பயிருக்கு பதிலாக உணவு தானியம்!

திங்கள், 14 ஜூலை 2008 (21:01 IST)
பருவமழை தவறியாதால் பணப்பயிறுக்கு பதிலாக உணவு தானியம் பயிரிடுவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்று விதர்பா மக்கள் பாதுகாப்பு குழு கோரியுள்ளது.

இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதிலும் விதர்பா பிராந்தியத்தில் அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த மாநிலத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படும் புகுதிகளில் 97 விழுக்காடு முறையான நீர்ப்பாசன வசதி செய்யப்படாத பகுதிகள். அகில இந்திய அளவில் சராசரியாக (2000-01 புள்ளி விவரம்) ஹெக்டேருக்கு பருத்தி உற்பத்தி 191 கிலோ. ஆனால் விதர்பா பகுதியில் உற்பத்தி ஹெக்டேருக்கு 100 கிலோதான்.

இந்த பகுதியில் பருவமழை தவறுதல், பருத்தியைப் பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களினால் பருத்தி விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர். அத்துடன் பருத்தி உற்பத்தி செலவை விட, விற்பனை செய்யும் விலை குறைவாக இருக்கின்றது.

இந்த பகுதியில் மொத்தம் 34 லட்சம் விவசாயிகள் பருத்தியை பயிரிடுகின்றனர். இவர்களில் 95 விழுக்காடு விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர். கடன் தொல்லை தாங்காமல் 2001 முதல் 2006வரை 980 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த வருடமும் பருவமழை தவறியாதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, மத்திய, மாநில அரசுகள் பருத்தி போன்ற பணப்பயிருக்கு பதிலாக உணவு தானியம் சாகுபடி செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்று விதர்பா மக்கள் பாதுகாப்பு குழு கூறியுள்ளது.

இதன் தலைவர் கிஷோர் திவாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் புதிய விவசாய கடன் வழங்க ஆரம்பிக்காததால், இந்த பகுதி விவசாயிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறும் விவசாயிகள் பற்றிய விவரம் ஜூன் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விதர்பா பகுதியில் பலன் பெறும் விவசாயிகள் பற்றிய விபரம் கடைசி நாள்தான் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், முன்பு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதவர்கள். இவர்களுக்கு வங்கிகள் இன்று வரை புதிய கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

விதர்பா மக்கள் பாதுகாப்பு குழு தலைவர் கிஷோர் திவாரி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,

விதர்பா பகுதியில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் பருத்தி சாகுபடி செய்யும் பகுதிகளில் பாதிக்கும் மேல் இரண்டு தடவை விதைத்த பருத்தி விதைகளும் வீணாகி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு சோளம், உளுந்து விதைகளை இலவசமாக விநியோகிக்க வேண்டும். அத்துடன் இவற்றை பயிரிட ஏக்கருக்கு ரூ.2,000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்