கரீப் பருவத்தில் அமோக உற்பத்தி!

சனி, 21 ஜூன் 2008 (18:50 IST)
தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்குவதற்கு முன்னரே தொடங்கியுள்ளதால் நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்கும். இந்த வருடம் முன்னரே மழை பெய்யத் துவங்கியது.

அத்துடன் மற்ற மாநிலங்களிலும் முன்னரே பருவமழை பெய்ய துவங்கியது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக பருவமழை ஆரம்பிக்கும் நாளுக்கு, இரண்டு வாரம் முன்னரே மழை பெய்ய துவங்கியுள்ளது.


ஜூன் மாதத்தில் முதல் இரண்டு வாரத்தில் சராசரி மழை அளவைவிட 40 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது. இதனால் நெல் போன்ற உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் பெய்யும் தென் மேற்கு பருவமழை காலத்தில் விவசாயிகள் நெல், சோயா, நிலக்கடலை ஆகியவற்றை அதிக அளவு பயிரிடுகின்றனர்.

ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் மழை, ஜூலை மாதத்திற்குள் நாடு முழுவதும் பரவலாக பெய்ய துவங்கிவிடும். இது விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன தேவையை நிறைவேற்றுகிறது. இந்த பருவத்தில் உற்பத்தியாகும் உணவு தானிய உற்பத்தி, நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் 17 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதனால்தான் தென் மேற்கு பருவமழை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜூன் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 44 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜஸ்தானில் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், இந்த வருட பருவமழை வழக்கமாக பெய்யும் அளவு இருக்கும். 1941 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் சராசரி மழை அளவில் 99 விழுக்காடு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் கேரளாவில் இருந்து வரும் தகவல்கள் முதல் பத்து நாட்களில் வழக்கமாக பெய்யும் அளவைவிட, 40 விழுக்காடு குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கின்றன.

சராசரி அளவைவிட அதிக அளவு மழை பெய்துள்ளதால் சோயா, நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள், நெல், கரும்பு போன்றவை பயிரிட உதவிகரமாக இருக்கும். இதற்கு ஏற்றார் போல் நெல்லின் ஈரப்பதம் இருப்பதுடன். நீர் பாசன செலவும் குறையும் என்று விவசாய துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சோயா, நிலக்கடலை, உளுந்து, சோளம், மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படும் அளவு அதிகரிக்கும். இவைகளின் விதைப்பு பல பகுதிகளில் ஆரம்பமாகி விட்டது. சில பகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

மழை முன்னரே பெய்தாதல் விவசாயிகளுக்கு விதைப்புக்கு முந்தைய பணிகள் செய்ய போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளது. கூடுதல் மழையால் நல்ல விளைச்சலும் கிடைக்கும்.

பருவமழையை மட்டுமே நம்பி பயிர் செய்யும் பகுதிகளில் பயிர் அறுவடை ஆகும் காலம் வரை மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 செ.மீ. மழை தேவை.

இந்தியாவில் நெல் பயிரிடப்படும் மொத்த பரப்பளவில் 45 விழுக்காடு ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களில் 30 செ.மீ மழை பெய்துகிறது. மற்ற இரண்டு மாதங்களிலும் குறைவான மழையே பெய்கிறது.

கரிப் பருவத்தில் உளுந்து, சோளம், நெல், பயத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளும், நிலக்கடலை, மிளகாய், பருத்தி, சோயா, கரும்பு, மஞ்சள் ஆகியவையே அதிக அளவு பயிரிடப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்