இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. சர்க்கரை உற்பத்தியிலும் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருக்கின்றது.
இந்த பருவத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு 20 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கோலாபூர், சங்லி, சதாரா, சோலாபூர், நாசிக், ஜால்கான், அகமத் நகர், ஜல்னா, லாதுர், நான்டிட், யவாட்மால், புல்தானா, பீட் ஆகிய மாவட்டங்களில் கரும்பு அதிக அளவு பயிரிடப்படுகிறது.
சாங்வி சர்க்கரை ஏற்றுமதி நிறுவனத்தின் மூத்த இயக்குநர் சந்திரகாந்த் சாங்கி கூறுகையில், இந்த ஆண்டு மொத்தம் சர்க்கரை உற்பத்தி, (செப்டம்பர் மாதம் இறுதியில்) 90 லட்சத்து 5 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அக்டோபர் மாதம் முதலி செப்டம்பர் வரையிலான 12 மாதம் சர்க்கரை ஆண்டாக கணக்கிடப்படுகிறது).
தற்போதைய நிலவரப்படி சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கரும்பு பயிரிடப்படும் பரப்பு 20 விழுக்காடு குறையும் என்று தெரிகிறது.
சென்ற வருடம் (2006-07) 91 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியானது. இந்த வருடம் இதை விட குறைவாகவே உற்பத்தியாகும்.
மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததால், தற்போது 1 கிலோ சர்க்கரை சில்லரை விலை ரூ.17 முதல் ரூ.22 வரை என்ற அளவில் இருக்கின்றது.
போக்குவரத்து செலவு அதிகரித்து இருப்பதால் இனிவரும் பண்டிகை காலங்களில், குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளியின் போது சர்க்கரை விலை கிலோ ரூ.25 ஆக அதிகரிக்கும் என்று சந்திரகாந்த் சாங்கி தெரிவித்தார்.