உள்நாட்டு உணவு தேவைக்கே முன்னுரிமை-கமல்நாத்!

வியாழன், 19 ஜூன் 2008 (14:18 IST)
இந்தியா சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை விட, உள்நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்கவும், ஏழு வருடங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கே மத்திய அரசு முன்னுரிமை வழங்கும் என்று கமல் நாத் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பல ஆப்பிரிக்க நாடுகள் இந்தியா கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருப்பதை குறை கூறியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று லண்டனில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகையில், எங்களுக்கு மற்ற நாடுகளின் ஆலோசனை தேவை இல்லை. நாங்கள் உணவு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளும் விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இந்தியா தனது உள்நாட்டு தேவைக்கேற்றவாறு உணவு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வதற்கே முன்னுரிமை வழங்கும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை குறியீட்டு எண், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவு 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது என்று இடது சாரி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

கமல்நாத் லண்டனில் ஐரோப்பிய குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பீட்டர் மான்டில்சனை சந்தித்து பேசுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்