தொழிலாளர் பற்றாக்குறை - நெல் நடவு பாதிப்பு!

வியாழன், 29 மே 2008 (16:37 IST)
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய வேலைகள் செய்ய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் நடவு பணி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல பகுதிகளில் ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் நெல் பயிர் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்பதால், ஜூன் மாதத்திற்கு முன்பு விவசாய பணிகள் பாதிக்க வேண்டாம் என்று பஞ்சாப் மாநில அரசு கூறியிருந்தது. இதன் படி விவசாயிகள் ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு நடவு பணி துவக்க ஆயத்தமாக உள்ளனர்.

ஆனால் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நடவு உட்பட பல்வேறு வேலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 90 விழுக்காடு நெல் நடவு பணிகளை உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து தற்காலிகமாக பஞ்சார் வரும் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கமான பாரத் கிசான் யூனியனின் தலைவர் அஜ்மீர் சிங் லோக்வால் கூறும் போது, விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள இது போல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், பஞ்சாப் மாநிலத்தில் நடவு பணிகள் பாதிக்கப்படும். இதனால் நெல் பயிரிடும் பரப்பளவு குறையும் என்று தெரிவித்தார்.

மாநில விவசாய துறையும் தொழிலாளர் பற்றாக்குறையால், நெல் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து விவசாய துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய பணிகளுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து தற்காலிகமாக வரும் தொழிலாளர்களையே நம்பி உள்ளனர். இந்த மாதிரி சூழ்நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், அதுவும் அடுத்த மாதத்தில் நடவு பணிகள் தொடங்கும் சூழ்நிலையில், விவசாயிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் என்று கூறினார்.

சென்ற மாதம் கோதுமை அறுவடையின் போது, தொழிலாளர் பற்றாக்குறையால், விவசாயிகள் கோதுமையை விற்பனை நிலையங்களுக்கு கொண்டு போக முடியாமல் சிரமப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்