கரும்பு கொள்முதல் விலையை அதன் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண்மைத் துறை ஆணையாளர் கோசலராமன் வெளியிட்ட அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலையை அதன் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் வேளாண்மை துறை செயலாளர் தலைவராகவும், விவசாயிகள், வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
கரும்பின் தரக் காரணிகளான ஒட்டுமொத்த திடப்பொருள்கள், சர்க்கரைச் சத்து போன்றவற்றை கரும்பு சாறிலிருந்து கணக்கிட்டு, கரும்பின் விலையை நிர்ணயம் செய்ய ஒரு சூத்திரத்தை வகுத்து, அரசுக்கு குழு பரிந்துரை செய்யும்.
இந்த புதிய முறையால் தரமான கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக நியாயமான விலை கிடைக்கும் என்று கோசலராமன் கூறியுள்ளார்.