நெல்லுக்கு விலை ரூ.1,500- விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதன், 28 மே 2008 (15:52 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, குவின்டாலுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருச்சியில் நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி, இதன் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, செயலாளர் ராஜா சிதம்பரம் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடனை எவ்வித முன் நிபந்தனையும் விதிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் விவசாயிகள் 2006 மார்ச் 31ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாக திருப்பி செலுத்திய கடனை, மத்திய அரசு அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்க வேண்டும். இதே போல் கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,000 என நிர்ணயிக்க வேண்டும்

காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதி மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை, காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த, சுயேச்சையான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக அரசு விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டமான தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வேலை வழங்குவதை கண்காணிப்பதற்கு விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

கோவில்பட்டியில் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் வெண்கல சிலையை நிறுவுவது என்றும், பெரம்பலூரில் ஜூலை மாதம் 5ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்