டிராக்டர் கடன் : எஸ்.பி.ஐ சுற்றறிக்கை வாபஸ்!

புதன், 21 மே 2008 (17:50 IST)
டிராக்டர் வாங்க கடன் கொடுக்க வேண்டாம் என்று அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப‌‌ப் பெற்றுக் கொள்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும பாரத ஸ்டேட் வங்கி, சென்ற 16 ந் தேதி அதன் கிளை அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் புதிதாக டிராக்டர் உட்பட விவசாய கருவிகளை வாங்க கடன் வழங்க வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வங்கியை தொடர்ந்து, மற்ற வங்கிகளும் டிராக்டர் வாங்க கடன் கொடுப்பதை நிறுத்தும் என்ற அச்சம் விவசாயிகள், டிராக்டர் உற்பத்தியாளர்கள் உட்பட பல்வேறு வட்டாரங்களில் எழுந்தது.

இநத சுற்றிக்கையை, பாரதிய ஜனதா கட்சி எதிர்த்ததுடன், இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கிடமான சுற்றறிக்கையை திரும்ப‌ப் பெறுவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வங்கியின் ‌நி‌ர்வா‌கி ஓ.பி. பத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாங்கள் மே 16 ந் தேதி டிராக்டர் கடன் தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கை தவறான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக வருந்துகின்றோம். இந்த சுற்றறிக்கை உடனடியாக திரும்ப‌ப் பெறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்