விவசாயிகளுக்கு பயன் தரும் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை- உம்மன் சாண்டி வலியுறுத்தல்!

வியாழன், 8 மே 2008 (19:09 IST)
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயன்படும்படி ஏற்றுமதி இறக்குமதி கொள்கை இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உம்மன் சாண்டி கூறினார்.

கேரள மாநிலம் கொச்சியில் இன்று இயற்கை ரப்பர் வளர்ப்பு மற்றும் மேம்பாட்டு” குறித்த சர்வதேச கருத்தரங்கு தொடங்கியது. இதில் உரையாற்றிய கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி முன்னணித் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சான்டி உரையாற்றினார்.

அப்போது அவர், ஏற்றுமதி இறக்குமதி கொள்கை விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்களின் நலனை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இயற்கை ரப்பர் விலை அதிகரித்து வருவது நல்லது. இதனால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.

1956-57 ஆம் ஆண்டுகளில் ரப்பர் மரங்கள் 94,879 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டுது. தற்போது ரப்பர் மரம் 6,15,200 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்படுகிறது. இது 532 விழுக்காடு உயர்வு.

விவாசாயிகள் இயற்கை ரப்பருக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு ரப்பர் வாரியம் உரிய முயற்சிகளை எடுப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்டியன் பால் பேசும் போது, உலகமயமாக்கலால் பல தீமைகள் இருந்த போதிலும், உலக சந்தையில் இயற்கை ரப்பரின் விலை அதிக அளவு இருப்பதால் உள்நாட்டு விவசாயிகள் பலன் அடைகின்றனர். 1 கிலோ ரப்பர் விலை ரூ.120 ஆக இருப்பது விவசாயிகளுக்கு இலாபம்தான். ஆனால் அதே நேரத்தில் ரப்பரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உம்மன் சாண்டி “இந்திய இயற்கை ரப்பர் வணிக முத்திரையை” வெளியிட்டார். இதன் மூலம் உலக சந்தையில் இந்திய ரப்பரின் விற்பனை அதிகரிப்பதுடன், மற்ற நாட்டு ரப்பருடன் போட்டியிட முடியும்.

இந்த கருத்தரங்கில் ரப்பர் வாரிய தலைவர் சாஜின் பீட்டர், துணைத் தலைவர் ஜாக்கப் தாமஸ், அந்நிய நாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்