அதிக விலையில் கோதுமை இறக்குமதி- அரசு ஒப்புதல்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (14:10 IST)
விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையை விட, அதிக விலையில் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய விவசாய துறை அமைச்சர் சரத் பவார் ஒத்துக் கொண்டார்.

உள்நாட்டு விவசாயிகள் கோதுமை, நெல் ஆகியவைகளுக்குகான கொள்முதல் விலையை (குறைந்தபட்ச ஆதார விலை) அரசு உயர்த்தித் தரவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்தால், உள்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விடும் என்று காரணம் காட்டி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை பதில் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு அரசு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து வருகிறது.

உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கொள்முதல் விலையை விட அதிக விலை கொடுத்து மத்திய அரசு கோதுமை இறக்குமதி செய்கின்றது என பல்வேறு தரப்பினர் கூறிய போது, இதை மத்திய அரசு மறுத்து வந்தது அல்லது போக்குவரத்து செலவு குறைவு என்பன போன்ற காரணங்களை கூறி சமாளித்து வந்தது.

இப்போது மத்திய அதிகாரபூர்வமாக அதிக விலைக்கு கோதுமை இறக்குமதி செய்ததை ஒத்துக் கொண்டுள்ளது.

மக்களவையில் நேற்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளிக்கையில், 2006-07 நிதி ஆண்டில் 1 டன் 204.66 டாலர் என்ற விலையில் 55 லட்சத்து 54 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட்டது. இதே போல் சென்ற நிதி ஆண்டில் (2007-08) 1 டன் 372.82 என்ற விலையில் 17 லட்சத்து 69 ஆயிரம் டன் இறக்குமதி செய்ததாக தெரிவித்தார்.

உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் கோதுமைக்கும், அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய்பபடும் விலை கொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு அமைச்சர் சரத் பவார் பதிலளிக்கையில், உள்நாட்டில் கோதுமை குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, உலக அளவில் விலைப் புள்ளிக்கான விளம்பரங்களை தினசரிகளிலும், இதன் இணைய தளத்திலும் வெளியிட்டு, அந்நிய நாடுகளில் இருந்து கோதுமை இற்க்குமதி செய்யப்படுகிறது என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது விவசாய இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் பதிலளிக்கையில், 2008-09 பரி பருவ கொள்முதல் துவங்குவதற்கு முன், 2008ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 40 லட்சம் டன் கோதுமை இருப்பில் உள்ளது. இது குறைந்த பட்ச இருப்பு அளவை விட அதிகம்.

மத்திய அரசு கோதுமை எந்த அளவு கொள்முதல் செய்யவேண்டும் என்று இலக்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. இதை கொள்முதல் செய்யும் அரசு சார்பு நிறுவனங்களின் விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்