எண்ணெய் பனை சாகுபடி: தனியாருடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
சனி, 1 மார்ச் 2008 (12:41 IST)
தமிழகத்தில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2006-2007-ம் ஆண்டில் 5,341 ஹெக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 3,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட் உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் எண்ணெய் பனை பழக்குலைகள் டன் ஒன்றுக்கு ரூ. 3,270 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. காவேரி பாமாயில் நிறுவனம் ஜனவரி 15-ம் தேதி முதல் டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் கொள்முதல் செய்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வாரணவாசியில் மணிக்கு 2.5 டன் வீதம் பழத்திலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் பாமாயில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடண் இணைந்து தொகுப்பு பண்ணையாக 100 ஹெக்டரில் குறைந்தபட்சம 2 கி.மீ. பரப்பளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளன.
ஒரு மணி நேரத்தில் 2.5 டன் எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலையை மூன்று வருடத்துக்குள் அமைக்கவும், அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்று ரூ.10 லட்சம் வங்கி உத்தரவாதம் வழங்கவும் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் மூலம் வரும் ஐந்து ஆண்டுகளில் 20,500 ஹெக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி அதிகரிக்கும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.