இந்தியா 2 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி!

புதன், 27 பிப்ரவரி 2008 (16:06 IST)
கோதுமை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இந்தாண்டு 2 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யு‌ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நிலவும் வறட்சியால் கடந்த ஆண்டு 1.8 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய்ய‌ப்‌ப‌ட்ட நிலையில், இர‌ண்டாவது ஆண்டாக கோதுமை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட மிக குறைவான பரப்பளவிலேயே கோதுமை பயிரிட‌ப் ப‌ட்டிருப்பதால், வரும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 1.3 மில்லியன் டன் முதல் 7.5 மில்லியன் டன் வரை உற்பத்தி குறையலாம்.

எனவே 2 மில்லியன் டன் கோதுமையை ஜுலை மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்ய துவங்கலாம் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கா தூதரகத்திற்கான அயல்நாட்டு வேளாண்மை சேவை கூறியுள்ளது.

கடந்த மாதம் முதல் வானிலை ஓரளவு சாதகமாக இருப்பதால் பயிர் வளர்ச்சிக்கு உதவியாய் அமையலாம், எனினும் குறைவான பரப்பளவிலேயே கோதுமை பயிரிடப்பட்டுள்ளதால், உற்பத்தி குறையலாம் என்று கூறப்படுகிறது. வேளாண்மைத் துறை செயலாளர் மிஸ்ரா கூறுகையில், "சாதகமான, குளிர்ந்த காலநிலை இந்தாண்டில் சாதனையாக அமையும்" என்றார்.

'பிப்ரவரி 8-ம் தேதியின்படி, 8.5 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ளதாகவும், 15 மில்லியன் டன் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌த் திட்டமி‌ட்டு உள்ளதாகவும்' இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்