தேச சவால்களுக்கு அறிவியல்பூர்வ ‌‌தீ‌ர்வு - வெளியீடு!

புதன், 20 பிப்ரவரி 2008 (16:07 IST)
webdunia photoWD
நமது நாட்டை எதிர்நோக்கியுள்ள ஐந்து முக்கிய சவால்களுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளுக்கு அறிவியல்பூர்வமான திட்டத்தை இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் இன்று வெளியிட்டது!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸின் 95வது மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நமது நாடு சந்திக்கும் 5 முக்கிய சவால்களை எடுத்துக் கூறினார்.

1. உணவு உற்பத்தி, தண்ணீர் சேமிப்பும் பயன்பாடும்.

2. எரிசக்தி உற்பத்தியும் பயன்பாடும்.

3. உற்பத்தி தொழில்நுட்பம்

4. நகரப் போக்குவரத்து

5. கட்டடங்கள், கட்டடத் தொழில்நுட்பம்

ஆகிய 5 முக்கிய துறைகள் பெரும் சவாலாக உள்ளதென்றும், அதற்கு விஞ்ஞானிகள் தீர்வுகாண வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மேற்கண்ட சவால்களுக்கு தீர்வுகாணும் திட்டத்தை உருவாக்கியுள்ள இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பு, அதனை ஒரு புத்தகமாக தொகுத்து இன்று வெளியிட்டது.

webdunia photoWD
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் ராமமூர்த்தியும், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனும் அப்புத்தகத்தை வெளியிட்டனர்.

1. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் விவசாய உற்பத்தியை பெருக்குவது :

மண்வளம், சரியான பூச்சி மருந்து பயன்பாடு, வீரிய விதைகள், பாசன நீர் சேமிப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், இணையத்தின் மூலம் ஊரக அறிவியல் மையங்களை உருவாக்கி அதன்மூலம் புதிய மேம்பாடுகளை கொண்டு செல்லல். மகளிர் விவசாயிகளுக்கு சமநிலை அளித்தல் ஆகியவற்றைக் கொண்டு விவசாய உற்பத்தியைப் பெருக்குவது இந்த முதல் திட்டத்தின் அடிப்படைகளாகும்.

2. பசுமைப் புரட்சியை மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்கியதைப் போல, பசுமையைக் காப்பாற்றி உற்பத்தியை தொடர்ச்சியாக பெருக்கும் திட்டம்.

அணைவருக்கும் உணவு கிடைக்கச் செய்தல், வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல், விவசாய வணிக நிறுவனங்களை உருவாக்குதல், சுகாதாரக் கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான சுற்றுச்சூழல், சத்துணவு திட்டங்களை பலப்படுத்துதல், வளரும் குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் சத்துணவு வழங்கல் ஆகியவற்றின் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்றல்.

3. ஆடவருக்கு இணையாக மகளிர் விவசாயிகளுக்கும் சமநிலையை உறுதி செய்தல்.

விவசாயப் பணிகளில் ஈடுபடுவோரில் 73 விழுக்காட்டினர் பெண்கள் என்பதாலும், அவர்கள் தற்பொழுது குடும்பத்தைக் காப்பது மட்டுமின்றி, விவசாயத்தை தீவிரமாக மேற்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளதால் அவர்களின் மேம்பாட்டிற்காக அறிவியல் மாநாட்டில் வெளியிடப்பட்ட 9 அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவது.

4. குடி நீர் சுதந்திரத்தை உறுதி செய்தல்.

ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் நீரின் அளவை அளிப்பதற்கும், பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திட்டம்.

1950 ஆம் ஆண்டு ஆண்டொன்றிற்கு இந்தியர் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 5,000 கன மீட்டராக இருந்தது. 2006 ஆம் ஆண்டில் 2,000 கன மீட்டராக குறைந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் இது 1,500 கன மீட்டராக குறையும் நிலை ஏற்படும்.

இந்த நிலையைத் தவிர்க்கவும், தண்ணீர்த் தேவையை அதிகரிக்க அரசு விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்.

5. வெப்ப மாற்றமும், கடல் மட்டம் உயர்தலும்.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தேசிய அளவிலும், மண்டல அளவிலும் உள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் அரசு கூட்டமைப்பு ஏற்படுத்தி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடல் நீர் மட்டம் உயர்வதாலும், வானிலை மாற்றத்தாலும் கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களின் உற்பத்தி பாதிக்காத வண்ணம் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேச அளவில் வானிலை மாற்றம் தொடர்பான அறிவியல் ஆளுமை கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

6. உயிரியல் தொழில்நுட்பம், மானுட நலம்.

நமது நாட்டின் பயிர் வகைகளை காப்பது. அதற்கு எதிரான அழுத்தங்களை தடுத்து நிறுத்தி நமது பயிர்களின் உயிரணுத் தன்மையைக் காப்பது. மானுட நலனை உறுதி செய்யும் விதத்தில் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துதல், உடல் நலம் பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

தேச அளவில் உயிரியல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை சட்டப்பூர்வமான சுதந்திர அமைப்பாக உருவாக்குவது இன்றையச் சூழலில் அத்தியாவசியமாகும்.

7. எரிசக்தி உற்பத்திப் பயன்பாடு.

8. இயற்கை எரிபொருட்கள்.

9. வளம் குன்றா அறிவியல் எனும் புதிய அறிவியல் வழியை உருவாக்க வேண்டும்.

இத்திட்டங்களை நிறைவேற்ற 2008-09 நிதிநிலை அறிக்கையில் உடனடி ஒதுக்கீடாக ரூ.100 கோடி அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.