ஹரியனா கூட்டுறவு சங்கம் கோழி தீவனத்தின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.
ஹஃபீட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹரியனா மாநில கூட்டுறவு விற்பனை இணையம் கோழித் தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ரூ.20ம், கால்நடை தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ரூ.9ம் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து கூட்டுறவு அமைச்சர் ஹெச்.எஸ்.சத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்யும் பூச்சி மருந்து விலையை சமீபத்தில் 31 விழுக்காடு வரை குறைத்தோம். ஹபீட் தரமான கோழி, கால்நடை தீவனங்களை விற்பனை செய்கின்றது. இதற்கு மாநிலம் முழுவதும் சிறந்த வரவேற்பு உள்ளது.
இப்போது கோழி தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ரூ.20, கால்நடை தீவனத்தின் விலை ரூ.9 குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹபீட்டிற்கு ரோதக் என்ற நகரில் தினசரி 150 டன், சக்ராதிரா என்ற நகரில் தினசரி 50 டன் தீவனங்களை தயாரிக்கும் ஆலைகள் உள்ளன.
இதில் ரோதக் நகரில் உள்ள தீவனம் தயாரிக்கும் ஆலை 31 வருடம் பழைமையானது. எனவே இதை நவீன மயமாக்க முடிவு செய்துள்ளோம். முற்றிலும் தானியங்கியில் இயங்குவதுடன், குறைந்த மின் சக்தியில் இயங்கும் நவீன தீவன உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றப்படுகிறது. இது ரூ.5 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டு, தினசரி 300 டன் தீவனம் உற்பத்தி செய்யும் திறனாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நவீன ஆலை ஏப்ரலில் இருந்து உற்பத்தியை துவக்கும்.
தற்போது தீவனங்களின் விலை குறைத்துள்ளதால், ஹரியானாவில் உள்ள கோழி பண்ணைகளின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறினார்.