2008-இ‌ல் உணவு தா‌னிய உற்பத்தி 21 கோடி ட‌‌ன்: வேளாண் அமைச்சக‌ம் தகவல்!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:56 IST)
நமதநாட்டின் உணவு தானிய உற்பத்தி 2007-08-ம் ஆண்டில் இதுவரை கண்டிராத உயர் அளவாக 21 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீடு தெரிவிக்கிறது.

அரிசி, சோளம், சோயாபீன், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியும் இந்த காலத்தில் இதுவரை இல்லாத ஓர் உயர் அளவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

"2007-08-ம் ஆண்டில் 9 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும், 7 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் டன் கோதுமையும், 3 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் டன் இதர உணவு தானியங்களும், ஒரு கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் டன் பயறு வகைகளும், 2 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் டன் எண்ணெய் வித்துக்களும், 34 கோடியே 3 லட்சத்து 20 ஆயிரம் டன் கரும்பும் உற்பத்தியாகும்" என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இத‌ன்படி 2006-07-ம் ஆண்டைவிட 2007-08-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 7 லட்சம் டன்னும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 30 லட்சம் டன்னும் பருத்தி உற்பத்தி 7.5 லட்சம் பேல்களும் கூடுதலாக இருக்கும்.

எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை உற்பத்தி மட்டும் 72 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்