பங்களாதேசிற்கு 3 மாதத்தில் 5 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:49 IST)
பங்களாதேசிற்கு ஒரு டன் அரிசி ரூ.15,760-க்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நிலவிய கடும் புயலால் கடற்கரை வழியாக 5.5 லட்சம் டன் அரிசி பங்களாதேசிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டிற்கான அரிசி விலை நிர்ணயம் குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக கொல்கத்தாவில் கலந்து பேசினர்.

அதில் மூன்று மாதத்தில் 5 லட்சம் டன் அரிசியை பங்களாதேசிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மாதத்திற்கு 2 இரண்டு லட்சம் டன்னும், மூன்றாவது மாதத்தில் ஒரு லட்சம் டன்னும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து பங்களாதேசிற்கு அரிசி கொண்டு செல்லப்படுகிறது.

ரயில், சாலைப் போக்குவரத்து மற்றும் ஆறுகளின் வழியாக அரிசியை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மீது இரண்டு அரசிடமும் உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு அரிசி ஏற்றுமதி செய்யப்படும். இந்த மாதத்தில் முதற்கட்ட அரிசி பெறப்படும் என்று எதிர்பார்ப்பதாக, பங்களாதேஷ் உணவுத்துறை செயலர் அயுப் மியா கூறினார்.

பங்களாதேசில் டிசம்பர் மாதம் வரை உணவு பொருட்களுக்கான பற்றாக்குறை விகிதம் நகரப்பகுதிகளில் 15.77 விழுக்காடும், கிராமப்புற பகுதிகளில் 13.91 விழுக்காடுமாக உள்ளது. அதனால் குறிப்பாக அரிசி மற்றும் மாவு மீதான விலை கட்டாயம் அதிகரிக்கும் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்