கோதுமை இறக்குமதி இல்லை : பவார்!

சனி, 19 ஜனவரி 2008 (18:32 IST)
கோதுமை தேவையான அளவு இருப்பில் உள்ளதால், தற்சமயம் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

டெல்லியில் பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் சரத்பவார் கலநது கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தற்போது கோதுமை தேவையான அளவு இருப்பு உள்ளது. அத்துடன் இந்த பருவத்தில் கோதுமை விளைச்சல் நிர்ணயித்துள்ள இலக்கு அளவை எட்டிவிடும். எனவே உடனடியாக கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசு சர்வதேச சந்தையில் கோதுமையின் விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கோதுமை விளையும் பல நாடுகளில் பற்றாக்குறை உள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும் கோதுமை விலை அதிகரித்து உள்ளது.. தற்போது சர்வதேச சந்தையில் சிவப்பு நிற கோதுமை தான் கிடைக்கின்றது. இதை இங்குள்ள மக்கள் விரும்புவதில்லை. இதனால் தான் கோதுமை இறக்குமதி செய்வதை தாமதப்படுத்தி வருகின்றோம் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்